பன்னாட்டு தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிறப்பு அழைப்பு – பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் நாளைமறுதினம் விஜயம்!

Uncategorized

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராரிசியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை இதாலிக்கு செல்லவுள்ளனர்.


இத்தாலி – போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள பன்னாட்டு தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு சிறப்பு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இலங்கை குறித்து சர்வதேச மட்டத்தில் காணப்பட கூடிய எதிர்மறையான பிரதிப்பளிப்புகளை நீக்கி ஆராக்கியமான உறவினை மேற்குலகத்துடன் வலுப்படுத்த இந்த மாநாடு பெரும் வாய்ப்பாக அமையும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


மேலும் இந்த மாநாட்டின் பக்க நிகழ்வுகளாக இத்தாலியின் பிரதமர் மரியோ டிராகி மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் லூய்கி டி மாயோ ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளார்.


இந்த கலந்துரையாடல்களின் போது இலங்கை – இத்தாலி இருதரப்பு ஒத்துழைப்புகளில் வர்த்தகம், முதலீட்டு, சுற்றுலா மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை விரிவாக்குவது குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


இதேபோன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவர் டேவிட் மரியா சசோலியையும் பிரதமர் சந்தித்து கலந்துரையாட உள்ளார். அத்துடன் ஸ்லோவேனியாவின் ஜனாதிபதி போருட் பாஹோர் உள்ளிட்ட பல தலைவர்களையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.


ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை ஆம்பிக்கப்பட உள்ள நிலையில் இத்தாலி விஜயமானது பல வழிகளில் நன்மையளிக்கும் எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


இதேவேளை இத்தாலி விஜயத்தின் போது பாப்பரசரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் இலங்கை தரப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இந்த சந்திப்பானது 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்த விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் கத்தோலிக்க மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து தெளிவுப்படுத்ததும் ஒன்றாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.